Monday, June 22, 2020

வானங்களும் பூமியும் அல்குர்ஆனில் - 02

(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:158)

அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
(அல்குர்ஆன் : 7:162)

வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
(அல்குர்ஆன் : 7:185)

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் : 7:187)

(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
(அல்குர்ஆன் : 8:11)

(இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
(அல்குர்ஆன் : 8:32)

நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 9:2)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 9:36)

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
(அல்குர்ஆன் : 9:116)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
(அல்குர்ஆன் : 10:3)

நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 10:6)

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
(அல்குர்ஆன் : 10:18)

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
(அல்குர்ஆன் : 10:24)

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
(அல்குர்ஆன் : 10:31)

வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
(அல்குர்ஆன் : 10:55)

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
(அல்குர்ஆன் : 10:61)

அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
(அல்குர்ஆன் : 10:66)

அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
(அல்குர்ஆன் : 10:68)

“வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
(அல்குர்ஆன் : 10:101)

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 11:7)

பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன் : 11:44)

“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
(அல்குர்ஆன் : 11:52)

உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
(அல்குர்ஆன் : 11:107)

நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
(அல்குர்ஆன் : 11:108)

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.
(அல்குர்ஆன் : 11:123)

“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
(அல்குர்ஆன் : 12:101)

இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
(அல்குர்ஆன் : 12:105)

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
(அல்குர்ஆன் : 13:2)

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
(அல்குர்ஆன் : 13:15)

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
(அல்குர்ஆன் : 13:16)

அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
(அல்குர்ஆன் : 13:17)

அதற்கு, (இறைவன் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 14:10)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.
(அல்குர்ஆன் : 14:19)

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
(அல்குர்ஆன் : 14:32)

“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும்,  நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
(அல்குர்ஆன் : 14:38)

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
(அல்குர்ஆன் : 14:48)

இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
(அல்குர்ஆன் : 15:14)

வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 15:16)

இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
(அல்குர்ஆன் : 15:22)

நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
(அல்குர்ஆன் : 15:85)

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.
(அல்குர்ஆன் : 16:3)

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 16:10)

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 16:49)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது; (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
(அல்குர்ஆன் : 16:52)

இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.  
(அல்குர்ஆன் : 16:65)

வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்.
(அல்குர்ஆன் : 16:73)

மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 16:77)

வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 16:79)

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:44)

உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 17:55)

“அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
(அல்குர்ஆன் : 17:92)

“அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.  
(அல்குர்ஆன் : 17:93)

(நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.
(அல்குர்ஆன் : 17:95)

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை!
(அல்குர்ஆன் : 17:99)

(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 17:102)

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
(அல்குர்ஆன் : 18:14)

“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  
(அல்குர்ஆன் : 19:65)

இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
(அல்குர்ஆன் : 19:90)

No comments: