Saturday, July 18, 2020

சுவர்க்கத்து கன்னிகள் - 01

(அறிமுகம்)
இறைவன் மனிதனை இயற்கையாகவே தங்கம், வெள்ளி, பணம், வாகனங்கள் மற்றும் கால்நடைகள் போன்றவற்றில் நாட்டம் உள்ளவனாகவே படைத்துள்ளான். மேலும் இவற்றை படைத்தது மட்டுமல்லாமல் அவற்றை சோதனைப்பொருட்களாக ஆக்கியுள்ளான். இந்த சோதனை பொருட்களை மனிதன் எவ்வாறு தன் இச்சைகளுக்கு மத்தியில் கையாளப்போகிறான் என்பதை சோதிப்பதற்கு உரியதாகும். இவற்றை மறுமைக்காக பயன்படுத்துவானாயின் இறைவனிடத்தில் மனிதன் வெற்றி பெற்றவன் ஆகின்றான். மாறாக என்ன நோக்கத்திற்காக தான் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளான் என்பதை மறந்து தனது அதி உச்ச இச்சைகளுக்கு இவற்றை பயன்படுத்துவானாயின் நிலையான மறு உலக வாழ்க்கையில் தோல்வி அடைந்தவனாகின்றான்.

இவ்வாறே, இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆணுக்கு பெண்ணின் ஆசையையும், பெண்ணுக்கு ஆணின் ஆசையையும் வைத்தே படைத்துள்ளான். இறைவன் தந்த சோதனைப் பொருட்களில் இந்த எதிர்ப்பால் ஆசையே மிகப் பெரும் சோதனையாகும். இறைவனின் இந்த சோதனையில் மனிதன் தன் இச்சைக்கு கட்டுப்பட்டு தவறான முறையில் தனது இச்சைகளை நிறைவேற்றி மறு உலக வாழ்க்கையில் தோல்வி அடைபவனாகவோ அல்லது நெறி தவறாது இறைவன் மற்றும் இறை தூதர் கூறிய பிரகாரம் முறையாக திருமணம் செய்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றி பெறுபவனாக இருக்கின்றான். 

தற்காலத்தில் இந்த சோதனையானது மிக அதிகமாகவே உள்ளது ஏனெனில், நாம் வாழும் சூழல் நன்மை செய்யக்கூடிய சூழல் இல்லை மாறாக மிக பாவமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நன்மைகள் செய்வதை விட பாவங்கள் செய்வது இலகுவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனையில் இருந்து வெற்றி பெற எங்களுக்கு வெற்றி பெற்றால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை அறிய ஊக்குவிக்கப்படுகின்றது. நெறி தவறி தன் இச்சைக்கு தலை வணங்கி போகாமல் தனது இச்சைகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தால் இறைவனும் மற்றும் தூதர்களும் கிடைக்கப்போகும் வெகுமதிகளையும் மற்றும் அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களையும் அருளியுள்ளார்கள். 

சுவர்க்கம்:
சுவர்க்கமானது மரணமற்ற மற்றும் ஒரு மனிதன் என்னவெல்லம் ஆசைப்படுகின்றானோ அவை அனைத்தையும் பெற்றுத்தரக்கூடிய ஒரு இடமாகும். மேலும் இவ்வுலக வாழ்க்கையை விட முழுமையான மற்றும் திருப்தியடைந்த  சந்தோஷத்தையும் தரக்கூடிய ஒரு இடமாகும். உதாரணமாக இவ்வுலகில் தாகித்த ஒரு மனிதன்,  தனக்கு மிகவும் பிடித்ததை சிறிதளவு அருந்தும்போது வயிறு நிரம்பிவிடும் ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் தாகம் எடுக்கும். மாறாக சுவர்க்கத்தில் தனக்கு பிடித்ததை எவ்வளவு வேண்டுமென்றாலும் அருந்தி திருப்தி அடையக்கூடிய பாக்கியத்தை பெறக்கூடியதாக இருக்கும். 

இதே போல்தான் சுவர்க்கத்தில் இருக்கும் பெண்கள் இவ்வுலகில் உள்ள பெண்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். ஒரு மனிதனுக்கு இதைப்பற்றி முற்று முழுதாக தெரிந்தால் அவன் தீமையான செயற்பாடுகளை விட்டு வெகு தூரமாவான். இந்த தொடரில்  இயன்ற அளவு அல் குர் ஆன், தப்ஸீர், ஹதீஸ் போன்றவற்றிலிருந்து சுவர்க்கத்து பெண்கள் மற்றும் அவர்களின் இயல்புகள் என்பவற்றை தொகுத்து தரப்படும். 

நன்றியுடன்,
17 ஜூலை 2020

No comments: