Saturday, July 6, 2019

குறுக்குத்தெரு சம்பவம்-3

உள்ளூர் தெருக்களில் சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டும் விதம் ஒரு வகையான பீதியை கிளப்புகின்றன. அவர்களுடைய முச்சக்கரவண்டி எந்த வேகத்தில் செல்கின்றது என்று சில வேளை அவர்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம் ஏனெனில் அவ் வேகமானது ராக்கெட்டின் வேகத்தைவிட மிஞ்சி விடும் போல் உள்ளது. முன்னால் வரும் வாகனங்கள் முந்த படும் வாகனங்கள் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் பாதசாரிகள் என்ற எந்த வேற்றுமையும் இல்லாமல் எந்த அனுசரிப்பும் இல்லாமல் தனக்கு மட்டுமே போடப்பட்ட வீதியை போல் இவர்களின் அட்டகாசம் தலைக்குமேல் ஏறி உள்ளது. அதிலும் குறிப்பாக சில வயதுக்கு வராத ஓட்டுனர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதற்கு ஒப்பானவர்கள் இவர்களை தவிர யாரும் இல்லை. இன்னும் சில ஓட்டுனர்கள் தன்னை ஒரு ஹாலிவுட் கதாநாயகர்கள் என்று எண்ணிக் கொண்டோம் முச்சக்கரவண்டியை இறுதி சக்கரங்களிலும் தனி ஒரு சக்கரத்திலும் மற்றும் தலைகீழாகவும் ஒட்டி அசத்துகிறார்கள். தயவு செய்து உங்களது அசத்தல் களை ஊருக்கு வெளியில் உள்ள தோட்டத்திலோ அல்லது வயல்வெளிகளிலும் முயற்சி செய்யுங்கள் ஏனெனில் வீதியில் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் மற்றும் முதியவர்களும் பாதசாரிகள் ஆக இருக்கின்றார்கள்.

Wednesday, July 3, 2019

தொழில் செய்யும் இடம்

நீண்ட நாட்களின் பின் என்னோடு வேலை செய்யும் ஒரு நண்பரை சந்தித்தேன். நிறையவே அளாவிளாவினோம். குடும்பம், அரசியல், வேடிக்கை, வினோதம், சமகால பிரச்சனைகள், உலககிண்ண கிரிக்கட் மற்றும் தொழில் இடங்கள் போன்றன இவற்றில் அடங்கும். அவர் தான் வேலை செய்யும் இடத்தைப்பற்றி ஒரு கதை சொன்னார். அவர் இவ்வாறு ஆரம்பித்தார். "அது ஒரு அடர்ந்த காடு. இக்காட்டின் நுழைவாயிலின் ஊடாக சுமார் காலை 8 மணி அளவில் உட்சென்று மாலை 5 மணிக்குள் வெளியாக வேண்டும். சுமார் 8 மணி தொடக்கம் 9 மணி பயணத்தில் இக்காட்டினுள் மிகப் பயங்கரமான கொடூரமான மிருகங்களை சந்திக்க நேரிடும். இதுபோக மிகக் கொடிய விஷமுள்ள பாம்புகளும் உள்ளன. வழியில் பல விதமான ஆறுகளையும் கால்வாய்களையும் மலைகளையும் பெரிய ஆபத்துக்களையும் கடக்க வேண்டும். இவ்வளவும் கடந்து மாலை 5 மணிக்குள் காட்டின் மறுபக்கத்தின் வழியாக எவர் ஒருவர் வருகின்றாரோ அவரே அந்நாளில் வெற்றி பெற்றவர் ஆவார்". இவ்வாறு தனது வேலை செய்யும் இடத்தை பற்றி மிகவும் சுவைபட நண்பர் கூறினார். 樂樂樂

Monday, July 1, 2019

குறுக்கு தெரு சம்பவம் 2.

உள்ளூர் தெருக்களில் சில இடங்களில் ஸ்பீட் பிரேக்கர்ஸ் போடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு அணைக்கட்டின் உயரம் என்பது வேறு விடயம். இன்னொரு முக்கியமான விடயம் தான் இவ்வாறான ஸ்பீட் பிரேக்கர்களை வீதியின் முழு அகலத்துக்கும் போடாமல் சில இடங்களில் வீதியின் குறுக்காக அரைவாசி தூரத்துக்கு போடப்பட்டுள்ளது. மீதி அரைவாசி போடப்படாமல் உள்ள இடத்தின் ஊடாகவே ஊரில் உள்ள எல்லா வாகனங்களும் வர எத்தனிக்கின்றன. இவ் வாகனங்கள் வரும்போது சரியான பக்கத்தில் வரும் வாகனங்கள் வருகின்றனவா இல்லையா என்ற எந்த கவலையும் இல்லாமல் தன்னுடைய வாகனத்தை இந்த ஸ்பீட் பிரேக்கர் போடப்படாத இடத்தினூடாக வலுக்கட்டாயமாக செலுத்துகிறார்கள். இது பல அசௌகரியங்களை முன்னால் வரும் வாகனங்களுக்கு கொடுத்தாலும் அதைப்பற்றி எந்த ஒரு கவலையும் எமது வாகன ஓட்டுனர்கள் கொள்வதில்லை. ஆனால் இதே மாறி நடக்குமானால் மற்ற வாகன உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கு தூற்றுவதில் இவர்கள்தாம் முதலிடம். மீண்டும் எங்களுக்கு வந்தால் இரத்தம் உங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி.

குறுக்குத் தெருவில் வாகனம் நிறுத்தும் அதிபுத்திசாலிகள்.


சிறிய தெருக்கள் மற்றும் ஒழுங்கைகளில் வாகனம் நிறுத்தும் போது கொஞ்சமாவது மூளையை பாவித்து உங்களது அடங்காத வாகனங்களை நிறுத்துங்கள். ஆகக் குறைந்தது எல்லா வாகனங்களையும் ஒரே பக்கத்தில் நிறுத்துங்கள் வழியால் வரும் மற்ற வாகனங்களையும் கொஞ்சமாவது யோசியுங்கள். மற்றவருக்கு தடையாக உங்களது வாகனங்களை நிறுத்தாதீர்கள், அது துவிச்சக்கர வண்டியாயினும் சரியே !!!

இவ்வளவு செய்து போட்டு மற்றவர்கள் அதை செய்தால் உங்களுக்கு கோபம் வேற வருகின்றது. #தனக்கு #வந்தால் #இரத்தம் #மற்றவனுக்கு #வந்தால் #தக்காளி #சட்னியா ? ? ?
இனியாவது திருந்துங்கள் ! ! !