தூய்மையானவற்றை உண்ணுதல்
நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.
அல் குர்ஆன் 2:172
நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸயீ
பிஸ்மில்லாஹ் கூறி அருகிலிருப்பதை உண்ணுதல்
உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், " சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு" என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல்: புகாரி 5376
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிஸ்மில்லாஹ்" கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: முஸ்லிம் 4105
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி (பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி 1781
இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்".
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4108
உணவுப் பொருள் கீழே விழுந்தால்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்."
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4138
சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்
நபி (ஸல்) அவர்கள், " ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி 5398,முஸ்லிம் 4122
நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4115
நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்
நபி (ஸல்) அவர்கள் "ஸம் ஸம்" தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5617
அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: "மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்".
நூல்: புகாரி 5615
பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்."
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), நூல்: புகாரி 153
சாப்பிட்ட பின் விரல்களைச் சூப்புதல்
(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களைச் சூப்புமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 4136
பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்
நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு "அதிலே கொழுப்பு இருக்கிறது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 211
சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா".
(அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி), நூல்: புகாரி 5458
வலது புறமிருந்து வினியோகிக்கத் துவக்குதல்
நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு "வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)" என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 5612
வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் "(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா. என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்". என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 5620
ஒருவரது உணவு இருவருக்குப் போதும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்".
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 4182
உங்கள் வீடுகளிலோ,உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ ,உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ ,உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ ,அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ ,அங்கேயோ அல்லது உங்கள் நண்பரிடமோ, நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் 24:61
அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது
(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றே தவிர இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2455
சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:" உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்".
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5460
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 671
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உணவு வந்து காத்திருக்கும் போதும் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி). நூல்: முஸ்லிம் 969
உணவைக் குறை கூறுதல் கூடாது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.
நூல்: புகாரி, 3563
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
அல் குர்ஆன் 7:31
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17:27
பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்".
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), நூல்கள்: முஸ்லிம் 1213, திர்மிதி 1816
--
rk@+94718080883
http://rkark.blogspot.com
http://hockalmunai.blogspot.com
No comments:
Post a Comment