அல்குர்ஆனில் இறைவன் பல இடங்களில் வானங்கள் மற்றும் பூமி சம்பந்தமாக கூறியுள்ளான்.
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:19)
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:22)
“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் : 2:33)
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
(அல்குர்ஆன் : 2:59)
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 2:107)
இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
(அல்குர்ஆன் : 2:116)
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் : 2:117)
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் : 2:164)
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் : 2:255)
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
(அல்குர்ஆன் : 2:284)
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
(அல்குர்ஆன் : 3:5)
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
(அல்குர்ஆன் : 3:29)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:109)
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
(அல்குர்ஆன் : 3:124)
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
(அல்குர்ஆன் : 3:129)
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 3:133)
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
(அல்குர்ஆன் : 3:180)
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 3:189)
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
(அல்குர்ஆன் : 3:191)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 4:126)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:131)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன் : 4:132)
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 4:153)
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
(அல்குர்ஆன் : 4:170)
யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
(அல்குர்ஆன் : 5:18)
நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 5:40)
இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
(அல்குர்ஆன் : 5:66)
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 5:97)
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 5:112)
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.
(அல்குர்ஆன் : 5:120)
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 6:1)
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.
(அல்குர்ஆன் : 6:3)
அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
(அல்குர்ஆன் : 6:6)
“வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:12)
“வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 6:14)
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
(அல்குர்ஆன் : 6:35)
அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
(அல்குர்ஆன் : 6:73)
அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
(அல்குர்ஆன் : 6:75)
“வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).
(அல்குர்ஆன் : 6:79)
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(அல்குர்ஆன் : 6:99)
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:101)
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 6:125)
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 7:40)
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
(அல்குர்ஆன் : 7:54)
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
(அல்குர்ஆன் : 7:96)
No comments:
Post a Comment